ராமேசுவரத்தில் இருந்து ஊட்டிக்கு பஸ் இயக்க வேண்டும்
ராமேசுவரத்தில் இருந்து ஊட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.;
பரமக்குடி,
ராமேசுவரத்திலிருந்து ஊட்டிக்கு நேரடியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து பரமக்குடி வழியாக இரவு செல்லும் அந்த அரசு பஸ் கோயம்புத்தூர் வரை இயக்கப்பட்டு வருகிறது. பின்பு அங்கு இருந்து வேறு பஸ் மூலம் தான் பயணிகள் ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு அலைச்சலும், கூடுதல் நேரம் மற்றும் பணச்செலவும் ஏற்படுகிறது.
தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டு வரும் இந்த நிலையிலும் கோடை வெயில் தாக்கத்தை போக்கவும், சுற்றுலா செல்லவும் ஏராளமானவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அந்த பஸ்சின் வழித்தடத்தை ராமேசுவரத்தில் இருந்து பரமக்குடி வழியாக நேரடியாக ஊட்டி வரை இயக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.