வெளியூர் செல்ல பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வெளியூர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-06-12 20:39 GMT

நாகர்கோவில்:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வெளியூர்களுக்கு செல்ல ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பள்ளிகள் திறப்பு

குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வேலை செய்து வருகிறார்கள். இதனால், அவர்கள் அந்த மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

மேலும், ஏராளமான மாணவர்கள் தனியாகவும், குடும்பத்தினருடனும் வெளியூர்களில் தங்கியிருந்து கல்வி படித்து வருகிறார்கள். கோடை விடுமுறையை முன்னிட்டு இவர்கள் அனைவரும் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து பள்ளிகளிலும் திறக்கப்படுகிறது. இதனால் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அனைவரும் நேற்று மீண்டும் தாங்கள் தங்கி இருந்த பகுதிகளுக்கு பஸ், ரெயில் மூலம் புறப்பட்டனர். நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் நேற்று காலை முதல் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் சென்னை, திருச்சி மற்றும் மதுரை செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

129 சிறப்பு பஸ்கள்

பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 10 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 10 பஸ்களும், திருச்சிக்கு 4 பஸ்களும், மதுரைக்கு 30 பஸ்களும் இயக்கப்பட்டன. இதுபோல் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக உவரிக்கு 50 சிறப்பு பஸ்களும், திருச்செந்தூருக்கு 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மீனாட்சிபுரம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு பஸ்களும், கோவைக்கு ஒரு பஸ்சும், மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 2 பஸ்களும் இயக்கப்பட்டன. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு நேற்று மட்டும் 129 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

ரெயில்களில் கூட்டம்

இதுபோல், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையங்களில் இருந்து நேற்று சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று மாலை கோட்டார் ரெயில் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

Tags:    

மேலும் செய்திகள்