83.63 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 83.63 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.;

Update: 2022-06-27 16:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 83.63 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் நடத்தப்படவில்லை. அந்த 2 ஆண்டுகளில் பிளஸ்-1 படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 109 அரசு பள்ளி, ஒரு அரசு உதவிபெறும் பள்ளி, 82 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 24,436 மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-1 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 11,063 மாணவர்களும், 10,983 மாணவிகளும் என மொத்தம் 22,046 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினார்கள்

மாணவிகளே அதிகம் தேர்ச்சி

இந்தநிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18,438 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 83.63 சதவீதம் ஆகும். மாணவர்களில் 8,458 பேர் தேர்ச்சி பெற்றனர். அது 76.45 சதவீதம் ஆகும். மாணவிகளில் 9,980 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 90.87 சதவீதம் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதையொட்டி அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்