அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் டுவீட்
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.;
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.
நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் என்று ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.