நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் - அன்புமணி ராமதாஸ்
பல அரசியல் கட்சியினர் சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.;
பா.ம.க. தலைமை நிலைய செயலாளராக இருந்த இசக்கி படையாட்சியாரின் உருவப்படம் திறப்பு விழா தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிற்சி பயிலரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இசக்கி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
இசக்கி அண்ணாச்சி என்னை முதல்-அமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டவர். அவரது உழைப்பு வீண் போகக்கூடாது, பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவரது லட்சியத்தை நினைவில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும்.
சென்னையில் டாக்டர் ராமதாஸ் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றிய கருத்தரங்கம் நடத்திக் கொண்டிருந்தார். பல அரசியல் கட்சியினர் சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு தலைமை தாங்கும் தகுதி டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே உண்டு. தற்போது பல மாநிலங்களில் சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரம் வருகிறது வேகமாக ஒற்றுமையாக செயல்பட வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். அனைத்து சமுதாயமும் நம்மை ஏற்றுக்கொண்டுள்ளது. நம்முடைய இலக்கை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். எனவே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.