நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை தேர்தல் கமிஷனர் 2-வது நாளாக ஆலோசனை
சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று, தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கருத்துகளை கேட்டார். அப்போது தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி இன்று காலை (சனிக்கிழமை) சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடமும், மாலை தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆகியோரிடமும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.