கோவை
கோவை புரூக்பாண்ட் சாலையில் ரூ.50 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்
கோவை மாநகரில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் தேவைப்படும் இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.49 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து தற்போது கோவை புரூக்பாண்ட் சாலையில் தேவாங்க பள்ளி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கார்கள்
கோவை மாநகரில் தேவையான இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக புரூக்பாண்ட் சாலையையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.50 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. இது திறந்த வெளி வாகன நிறுத்துமிடமாக இருக்கும்.
இந்த வாகன நிறுத்துமிடத்தில் 100 கார்கள் வரை நிறுத்தி வைக்க முடியும். மேலும் ஏராளமான இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி வைத்து கொள்ளலாம். இதே போன்று மாநகரில் தேவைப்படும் இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.