ரூ.7 கோடி மதிப்புள்ள பூங்கா இடத்தை காணவில்லை

அரக்கோணத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள பூங்கா இடத்தை காணவில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் ெதரிவித்தார்.

Update: 2023-03-31 17:35 GMT

நகராட்சி கூட்டம்

அரக்கோணம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் லதா வரவேற்றார். கூட்டத்தில் வருவாய், மூலதன நிதி, குடிநீர் நீதி மற்றும் கல்வி நிதி குறித்த 2022 - 2023-ம் ஆண்டின் திருத்திய வரவு செலவு மற்றும் 2023 - 2024 ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சுவால்பேட்டை பகுதியில் காரியமேடை கட்டிடம் அமைத்து தருமாறும், கோவில் இடத்தில் சடங்குகள் செய்ய பல தடைகள் ஏற்படுவதால் குறைந்த வாடகைக்கு சடங்குகள் செய்ய காந்தி பூங்கா இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டித் தர கோரியும் 17-வது வார்டு உறுப்பினர் சி.என்.அன்பு கோரிக்கை விடுத்தார்.

பூங்கா இடத்தை காணவில்லை

தி.மு.க. கவுன்சிலர் துரை சீனிவாசன் பேசுகையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை சாலையின் ஓரமாக நடுவதற்காக நகராட்சி சார்பில் பணம் கட்டியும் இது நாள் வரை மாற்றி அமைக்காமல் மின் வாரிய அலுவலர்கள் அலட்சியமாகவே உள்ளனர் என்றார்.

அதற்கு மின் வாரிய அதிகாரி பதிலளிக்கையில் பள்ளி தேர்வுகள் நடைபெறுவதால் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற வாரத்தில் மின் கம்பங்கள் மாற்றி நடப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் என்னுடைய 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.7 கோடி மதிப்புள்ள பூங்கா இடத்தை காணவில்லை. அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் லதாவிடம் கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் என்ஜினியர் ஆசீர்வாதம், சுகாதர அலுவலர் மோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்