பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் மூலிகை பூங்கா-முதன்மை கல்வி அலுவலர் திறந்து வைத்தார்

Update: 2022-11-29 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட மூலிகை பூங்காவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திறந்து வைத்தார்.

மூலிகை பூங்கா

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எதிர்கால சந்ததிகளுக்கு மூலிகைகளின் மகத்துவம் குறித்து தெரிவிக்கும் பொருட்டும் மாணவ-மாணவிகளின் முயற்சியால் பள்ளி வளாகத்தில் மூலிகை பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் மற்றும் வேம்பு, புங்கன், மூங்கில், புன்னை, பாதாம், வில்வம் உள்ளிட்ட 200 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

பாராட்டு

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கேசவகுமார், பள்ளி துணை ஆய்வாளர்கள் பொன்னுசாமி, சோலைராஜன், பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்து, பூங்காவை சிறப்பாக அமைத்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் பூங்காவில் செடிகளை பராமரித்து வளர்க்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்