நகராட்சி பூங்கா பணிபாதியில் நிறுத்தம்

Update: 2022-09-21 16:56 GMT


உடுமலை அபிராமி நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் புதுப்பொலிவுடன் நடந்து வந்த மேம்பாட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, புதராக காட்சியளிக்கிறது.

நகராட்சி பூங்கா

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அபிராமி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. முன்பு இந்த பூங்காவில்இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், உபயோகப்படுத்தமுடியாத நிலையிலும் இருந்தது. நாளடைவில் அந்த விளையாட்டு உபகரணங்கள் அங்கிருந்து நகராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடம், சுற்று வட்டாரத்தில் நடைபெற்று வந்த சாலைப்பணிகள் மற்றும் கட்டிடப்பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் பணிகளின்போது எடுத்துச்செல்வதற்கு வசதியாக இருப்பு வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.அந்த சுற்றுவட்டாரப்பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த பூங்காசுத்தப்படுத்தப்பட்டது.

புதுப்பொலிவுடன் பூங்கா

இந்த நிலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22-ன்படி ரூ.25 லட்சத்தில் புதிய நகராட்சி பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பூங்காவிற்குள் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நான்கு புறமும் ஸ்லாப் கற்கள் பதிக்கப்பட்ட தளம் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவை அழகுபடுத்தும் வகையில் சுற்றுச்சுவர்களில் பல்வேறு நிறங்களில் வர்ணம் பூசப்பட்டது. அதில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு மழைநீர் சேகரிப்பு, முகக்கவசம் அணிதல், கூடிவாழ்ந்தால் கோடிநன்மை, பிளாஸ்டிக்கிலிருந்து நமது உலகை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்று எழுதப்பட்டுள்ள வாசகத்திற்கு அருகில் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணிப்பை படம் வரையப்பட்டுள்ளது.

இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு வந்தன. பூங்காவிற்குள் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணிகளும் நடந்து வந்தன.

பணிகள் பாதியில் நிறுத்தம்

இந்த நிலையில் இந்த பூங்காவில் நடந்து வந்த பணிகள் திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு உபகரணங்களில் ஒன்று கீழே சாய்ந்து கிடக்கிறது. பூங்காவிற்குள் காய்ந்த தென்னந்தடுக்குகளும் கிடக்கின்றன.

பூங்காவிற்குள் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பூங்காவை அழகுபடுத்தும் பணிகளை மீண்டும் தொடங்கி, சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்