தனியார் பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வாணியம்பாடி அருகேதனியார் பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் வருகை குறைந்ததால் மேல்நிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் 24 மாணவர்கள் தமிழக அரசின் இலவச கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மூலம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நிர்வாக காரணமாக பள்ளி மூடப்படுவதாகவும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி கொள்ளுமாறும் பள்ளி நிர்வாகம் தகவல் அளித்ததன் பேரில், மாற்று சான்றிதழை சில மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் 24 மாணவர்கள் மாற்று பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பள்ளியின் தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.