மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அடித்ததாக புகார்: பள்ளி முன் முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்-மேச்சேரி அருகே பரபரப்பு
மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அடித்ததாக கூறி பள்ளி முன் முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதனால் மேச்சேரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.;
மேச்சேரி:
மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அடித்ததாக கூறி பள்ளி முன் முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதனால் மேச்சேரி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மாணவனுக்கு கன்னத்தில் அடி
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியர் ரவீந்திரநாத் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாணவன் ஒருவன், சக மாணவனிடம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்த அந்த ஆசிரியர், மாணவனை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவனுக்கு காது வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளான்.
நேற்று காலையில் அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் சக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளி முன் முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம் முடிவுக்கு வந்தது
தகவல் அறிந்த மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த ஆசிரியை பள்ளியில் இருந்து போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.