கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார்: சென்னை மாணவி காதலனுடன் கோர்ட்டில் தஞ்சம்

கடத்தப்பட்டதாக பெற்றோர் கூறி இருந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காதலனுடன் கோர்ட்டில் தஞ்சமடைந்தார்.;

Update: 2023-09-15 20:40 GMT

காரைக்கால்,

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் தீபிகா (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த கவுதம் (22). டிப்ளமோ படித்துள்ள இவர் அம்பத்தூரில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார். அப்போது, தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

பெற்றோர் எதிர்ப்பு

இவர்களது காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலன் கவுதமுடன் காரைக்காலில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து தமிழக பகுதியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் சென்னை அம்பத்தூர் போலீசில் பெற்றோர் தரப்பில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் நேற்று மாணவியை தேடி காரைக்கால் சென்றனர்.

கோர்ட்டில் தஞ்சம்

இதையறிந்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீசாரை கோர்ட்டு வக்கீல்கள் தடுத்தனர்.

அப்போது திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடியினர் காட்டினர். மாணவியின் பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினர்.

அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோர்ட்டு வாசலில் வைத்து தனது உறவினர்களிடம் நகைகளை தீபிகா கழற்றி கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றார். இச்சம்பவம் காரைக்கால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்