மருத்துவமனையை காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை எனக்கூறி காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2023-03-16 18:34 GMT

முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்று சொல்லக் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை சுற்றி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம், டி.என்.பி.எல். சிமெண்டு தொழிற்சாலை, ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றக் கூடிய சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இங்குள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை, டாக்டர்கள் பணியாளர்களை தூரத்தில் நிற்க வைத்தும், மாத்திரைகளை அள்ளிக் கொடுத்தும் அனுப்பி வைத்து விடுவதாக கூறி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று மருத்துவமனையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகம் மூலம் பெற்றுக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை முறையாக தொகையை திருப்பிப் தர மாதக்கணக்கில் காத்திருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் அறிவித்துள்ள நேரத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். மாற்று மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு அதற்குண்டான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை மீது இ.எஸ்.ஐ. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும் அதற்கான உத்தரவாத கடிதம் தேவை என்று தெரிவித்ததன் பேரில் உத்தரவாத கடிதம் வழங்கப்பட்டது.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய பணியை புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்