பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4½ அடி உயர்வு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தொடர் மழை பெய்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4½ அடி உயர்ந்தது.

Update: 2023-05-03 20:04 GMT

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தொடர் மழை பெய்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4½ அடி உயர்ந்தது.

பலத்த மழை

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவிலும் கனமழை விட்டு விட்டு பெய்தது.

இதனால் நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. சந்திப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கு நிறுத்தி இருந்த ஆட்டோக்களிலும் மழைநீர் புகுந்தது.

வீடு இடிந்தது

பலத்த மழையால் நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மழையின்போது பாளையங்கோட்டை பகுதியில் மரம் சாய்ந்தது. உடனே அந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

மழையின்போது பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலையில் இருந்து பாறாங்கற்கள் சரிந்து நாற்கர சாலையில் விழுந்தது. உடனே அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று, பாறாங்கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதேபோல் மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம், ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. பலத்த மழையால் சில இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தன.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து. மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4½ அடி உயர்ந்து 22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 929.74 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோன்று சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 6 அடி உயர்ந்து 45.70 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் சுமார் 2 அடி உயர்ந்து 32.81 அடியாகவும் உள்ளது.

களக்காடு தலையணை

களக்காடு பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு தண்ணீர் தடுப்பணையை தாண்டி விழுந்து பெருக்கெடுத்து ஓடியது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கவனமுடன் குளிக்குமாறு வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் விழுந்த குறைவான தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மூலைக்கரைப்பட்டி- 90, பாளையங்கோட்டை- 82, நெல்லை- 36, கொடுமுடியாறு- 27, காக்காச்சி- 25, நாலுமுக்கு- 24, ஊத்து- 21, மாஞ்சோலை- 19, களக்காடு- 12.60, நம்பியாறு- 10, அடவிநயினார்-12, கருப்பாநதி-2, குண்டாறு-2.

மூதாட்டி மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. விளாத்திகுளத்தில் பெய்த மழையில் ஒரு வீடு இடிந்து சேதமடைந்தது. தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.

மழை காரணமாக தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் உள்பக்க அறையில் இருந்த அந்தோணியம்மாள் (49) என்பவர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இடிந்த வீட்டுக்குள் சிக்கிய அந்தோணியம்மாளை பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடியில் நேற்று காலையில் லேசான வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாகவே இருந்தது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

கழுகுமலையில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலையிலும் மிதமான மழை பெய்தது. இதனால் அங்குள்ள கழுகாசலமூர்த்தி கோவில் தெப்பக்குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது. கழுகுமலை ஏ.பி.சி. நகர், லட்சுமி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் குளம் போன்று தேங்கியது.


Tags:    

மேலும் செய்திகள்