ஒப்பந்தம் எடுப்பதில் தகராறு ஆட்டோவில் தூங்கிய பந்தல்காரர் கழுத்தை அறுத்து கொலை

பந்தல் போடும் ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோவில் தூங்கிய பந்தல்காரர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-21 00:26 IST

புதுவண்ணாரப்பேட்டை,

திருவொற்றியூர் ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் என்ற பல்லு மோகன் (வயது 33). இவர், ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில் தெருவில் உள்ள முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மோகன், அவருடைய தம்பி தீபன் ஆகியோர் பந்தல் போடும் வேலைகளை முடித்துவிட்டு வீட்டு புறப்பட்டனர். போதையில் இருந்த மோகன், "நான் இங்கேயே தங்கி விட்டு காலையில் வருகிறேன்" என்று கூறிவிட்டு அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டோவில் படுத்து தூங்கினார். தீபன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கழுத்தை அறுத்து கொலை

ேநற்று அதிகாலை ஆட்டோவை எடுப்பதற்காக அதன் உரிமையாளர் விஜய் வந்தார். அப்போது ஆட்டோவில் மோகன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் , ஆட்டோவில் கொலை செய்யப்பட்டு கிடந்த மோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் ஆர்.கே.நகர் பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான தண்டையார்பேட்டை துர்கா தேவி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஐ.ஓ.சி.யை சேர்ந்த சிவா (24) ஆகிய 2 ேபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் பந்தல் போடும் ஒப்பந்தம் எடுப்பதில் கொலையான மோகனுக்கும், கைதான மணிகண்டனுக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன், மணிகண்டனை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கூட்டாளி சிவாவுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் தூங்கி கொண்டு இருந்த மோகனை கழுத்தை அறுத்து கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் குறித்து காலை 8 மணி அளவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 11 மணிக்குள் கொலையாளிகளை கைது செய்துவிட்டனர். 3 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்