முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

விழுப்புரம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-05 18:45 GMT

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரிக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கதிர்வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 56-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணிக்கு செடல் உற்சவமும், அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஊர்வலமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது உடலில் அலகு குத்தியபடி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன் பிறகு முருகனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்தோப்பு

இதேபோல் விழுப்புரம் அகரம்பாட்டை முத்தோப்பில் உள்ள பாலமுருகன் கோவிலில் 12-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணியளவில் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு வெற்றிவேல் வீதியுலாவும், 11.30 மணிக்கு வெற்றிவேலுக்கு மிளகாய்பொடி அபிஷேகமும், கற்பூர அபிஷேகமும், செடல் உற்சவமும் நடந்தது.

இவ்விழாவில் வெற்றிவேலை தூக்கி வந்த பக்தர்கள் சிலரின் உடல் முழுவதும் மிளகாய்பொடி கரைசலை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பக்தர் ஒருவர் மீது உரல் வைத்து இடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, நடந்த சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூந்தோட்டம்

விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி 21 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பாலசுப்பிரமணிய அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பக்தர்கள் பலர், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ஆதிவாலீஸ்வரர் கோவிலில்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர காவடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமான் காவடிகளுக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து காவடி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதிஉலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் 108 காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி உற்சவருக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் காவடி ஊர்வலம், தேர் ஊர்வலம், அலகு குத்துதல், உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள இந்திரா நகர் பாலமுருகன் கோவில், ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள பாலமுருகன் கோவில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்