திருக்கோவிலூர்உலகளந்தபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருக்கோவிலூர்,
பங்குனி பிரம்மோற்சவம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்ச விழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருக்கிறது. முன்னதாக 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் வெவ்வேறு வாகனங்களில் காலை, மாலையில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழா
31-ந்தேதி காலையில் வானமாமலை ஜீயர் மடத்தில் மண்டகப்படி நிகழ்ச்சியும், ஏப்ரல் 2-ந் தேதி மாலை தங்க கருட சேவை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 3-ந்தேதி காலை திருமஞ்சனம் மற்றும் சூர்ணோத்சவம் உற்சவமும், 4-ந் தேதி காலை தங்க பல்லக்கு, மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு முத்து பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சியும், 5-ந் தேதி மாலை வேடுபறி உற்சவமும் 6-ந் தேதி காலை தேர் திருவிழாவும், மாலையில் தீர்த்தவாரி சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி காலை மட்டையடி உற்சவமும், மாலையில் புஷ்ப யாகம், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி காலை விடையாற்றி உற்சவமும், மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் ராகவேந்திர மடம் எழுந்தருள் நிகழ்ச்சியும், மண்டகப்படியும் நடக்கிறது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் தெப்பத்தில் எழுந்தருள் நிகழ்ச்சியும், 9-ந் தேதி மாலையில் சீதா லட்சுமண அனுமன் சமேத ராமபிரான் தெப்ப உற்சவத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 10-ந் தேதி மாலை ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபாலன் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
பஞ்சாங்கம் வாசித்தல்
14-ந்தேதி சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, அன்றைய தினம் காலை தமிழ் வருட பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல், இரவு கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பவர் ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.