ஊராட்சி துணை தலைவியின் கணவர் வரவு-செலவு கணக்கு கேட்டதால் மோதல்
பண்ருட்டி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவியின் கணவர் வரவு-செலவு கணக்கு கேட்டதால் மோதல் ஏற்பட்டது.
புதுப்பேட்டை,
கிராம சபை கூட்டம்
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி மன்ற துணை தலைவியின் கணவர் வீரமணி ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்கும்படி கேட்டதாக தெரிகிறது. அப்போது 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள். தேவையென்றால் ஊராட்சி மன்ற துணை தலைவி கேட்கட்டும் என்று கூறியதாக தெரிகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் வாக்குவாதம் முற்றியதி்ல் அவர்கள் 2 பேரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கிராம சபை கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.