நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது

வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

Update: 2022-11-19 04:59 GMT

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன்‌ சமூக சேவகராகவும், ஆன்மிகவாதியாகவும் இருந்து வந்தார். தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி ஆவார்.

இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் வெங்கடேசன், நேற்று முன்தினம் இரவு ஆதனூர் மெயின் ரோடு ராகவேந்திரா நகர் பகுதியில் வார்டு உறுப்பினர் சத்தியநாராயணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீது ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடிக்கவில்லை. ஒரு வெடிகுண்டு வெடித்ததில் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது.

ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மர்ம நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிலம்பு நகர் பகுதியில் ஓடினார். ஆனால் அந்த 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து விடாமல் துரத்திச் சென்று வெங்கடேசனை கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்து 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், கொலையான வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசன் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடம்பாக்கம் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடிப்பதால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிகர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைத்தனர். இதனால் மாடம்பாக்கம் ஊராட்சி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இவர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடுவதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாடம்பாக்கம் அடுத்த குத்தனூர் முக்கிய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு தனது காரில் ஏற முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனை தடுத்து நிறுத்தி கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன், மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்தார்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். விடிய விடிய நடத்திய சோதனையில் கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரட்டை கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்