'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வேகம் எடுத்தது ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி விரைவில் திறப்புவிழா நடைபெறுகிறது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி வேகம் எடுத்துள்ளது. இதன் மூலம் விரைவில் திறப்புவிழா நடைபெறுகிறது.;
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி ஆமை வேகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இது தொடர்பாக 'தினத்தந்தி' யில் கடந்த 13-ந்தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதேபோல் கலெக்டரின் டுவிட்டர் பக்கத்திலும், இது தொடர்பாக வெளியான செய்தியையும், பணிகள் நடைபெறுவதையும் சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ளார்.
கலெக்டர் உத்தரவின் பேரில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினர். இதனால் பணிகள் தற்போது வேகமாக நடந்துவருகிறது. கட்டிடத்துக்கு வர்ணம் பூசுதல், உள்பகுதியில் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, கட்டிடத்துக்கு திறப்பு விழா நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.