பஞ்சமி நில விவகாரம்: பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம், பஞ்சமி நிலம் என்று தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் பா.ஜ.க., மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு புகார் செய்தார். இதற்கு பதில் அளிக்கும்படி, பட்டியலினத்தோர் ஆணையம் சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "விதிகளின்படி புதிதாக சம்மனை அனுப்பி விசாரணை நடத்தி, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மேல்முறையீட்டு வழக்கிற்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம், புகார் கொடுத்த பாஜ.க., நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது" என்று உத்தரவிட்டனர்.