பாம்பன் கடல் பகுதியை ஆழப்படுத்த திட்டம்

பாம்பன் கடல் பகுதியை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-13 19:24 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்லும் தற்போது தூக்குப்பாலம் அமைந்துள்ள கடல் பகுதியில் ஆழப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று அமைச்சர் வேலு பாம்பன் ரோடு பாலத்திற்கு வருகை தந்தார். பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி கப்பல்கள் செல்லும் வழித்தட பாதைகளான தென்கடல் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடல் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது உடன் நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ராமேசுவரம் நகராட்சி சேர்மன் நாசர் கான் ஆகியோர் உடன் வந்தனர்.

ஆய்வுக்குப் பின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா. வேலு கூறியதாவது:- பாம்பன் கடல் பகுதியில் தற்போது கடந்து செல்லும் கப்பல்களைவிட இன்னும் பெரிய கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் செல்ல வசதியாக இன்னும் 10 மீட்டர் ஆழத்திற்கு ஆழப்படுத்த சாத்தியகூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டத்தை மேலும் மேம்படுத்துவது குறித்தும், துறைமுக பகுதியில் நிர்வாக அலுவலகம் கட்டுவது குறித்தும் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்தும் அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ராமேசுவரத்தில் பயணிகள் படகு போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் அரசுக்கு வந்துள்ளது. விரைவில் ராமேசுவரத்தில் பயணிகள் படகு போக்குவரத்து மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கொந்தகை கிராம பகுதி கீழடி புதிய அகழ் வைப்பக கட்டிடங்களை அமைச்சர் எ.வா. வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக நாகரீகத்துடன் அவர்கள் வாழ்ந்ததாக கூறப் பட்டது. ஆனால் தற்போது கீழடி அகழாய்வு பணியில் கிடைக்கப் பெறும் தொல்பொருட்களை பார்க்கிற வகையில் தமிழர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும் கொந்தகை கிராம பகுதியில் செட்டிநாட்டு கலை நயத்துடன் கூடிய ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தற்போது 99 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, நெடுஞ்சாலை துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார், தளபதி, பூமிநாதன், காதர்பாட்சா முத்துராமலிங்கம், சிவகங்கை ஆர்.டி.ஓ. சுகிதா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மணிகண்டன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ், திருப்புவனம் யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், கீழடி ஊராட்சி தலைவர் வெங்கட சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்