பள்ளிபாளையத்தில் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
பள்ளிபாளையத்தில் நூல் குடோனில் திடீர் தீ விபத்து ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்;
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் உள்ள நூல் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
நூல் குடோன்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு நகர் பெரும்பாறை பகுதியில் சேகர் (வயது 44) என்பவர் பழைய நூல் குடோன் நடத்தி வருகிறார். இங்கு விசைத்தறி கூடங்களில் இருந்து பெறப்படும் நூல்கள், ஆயில்கள், பாட்டில்கள், இரும்பு பொருட்கள் வாங்கி மறு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் வேட்டி நூல்கள் இருக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மேலும் பரவி குடோன் முழுவதும் பிடித்து எரிய தொடங்கியது. இதில் குடோனில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்த பகுதியாக சென்ற மின்வயர்களிலும் தீப்பிடித்து எரிந்தது.
மின் இணைப்பு துண்டிப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோன் ஊழியர்கள் மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வெப்படை, திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து குடோனில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். அந்த பகுதி பொதுமக்களும் குடம், வாளிகளில் தண்ணீர் எடுத்து தீயை அணைக்க உதவினர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 2 பீரோக்கள், கட்டில், நூல் வேட்டிகள், ஆயில் என்ஜின், பழைய இரும்பு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் வருவாய் அலுவலர் கார்த்திகா சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரபரப்பு
அதில் குடோனில் இருந் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூல் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.