பல்லடம் கொலை சம்பவம்: முக்கிய குற்றவாளியை நெருங்கிய தனிப்படை போலீசார்
பல்லடம் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
நெல்லை,
பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீசார் நெருங்கியுள்ளனர். வெங்கடேசனின் சொந்த ஊர் நெல்லை என்பதால் நெல்லை மாவட்டத்தில் திருப்பூர் தனிப்படை போலீசார் முகாமிட்டு அவருக்கு தொடர்புடைய இடங்கள், உறவினர்கள் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் வெங்கடேசனின் செல்போன் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் அவர் சிக்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வெங்கடேசனை இன்றைக்குள் கைது செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் கொலை சம்பவம்:-
பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பலியானவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெஞ்சை பதறவைக்கும் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பல்லடம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனை முத்தையா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.