பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணை பகுதியில் புதர்மண்டி கிடக்கும் பூங்காக்கள் புத்துயிர் பெறுமா?

பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணை பகுதியில், புதர் மண்டி கிடக்கும் பூங்காங்களை புத்துயிர் பெற செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

Update: 2022-12-17 18:45 GMT
வரதமாநதி அணை

பழனியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், பாலசமுத்திரம் அருகே பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. இதேபோல் பழனியில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில், கொடைக்கானல் மலைப்பாதையில் வரதமாநதி அணை இருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இவ்விரு அணைகளும் பழனி பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணைகள் திகழ்கின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். வருண பகவான் கருணை காட்டியதால் தற்போது அணைகள் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

சுற்றுலா பயணிகள்

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நிரம்பி வழியும் தண்ணீரை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. குறிப்பாக வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்கு வருகை தருகின்றனர். பழனி பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலா பயணிகளும் அணைகளின் எழில் கொஞ்சும் காட்சியை பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் வந்து பொழுதை கழிக்கும் இடமாக இந்த அணைகள் உள்ளன.

இதேபோல் பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரதமாநதி அணை அருகே கன்னடிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இதனால் சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களும் அணைக்கு வந்து பார்வையிடுகின்றனர்.

புதர்மண்டிய பூங்காக்கள்

சுற்றுலா பயணிகள், பக்தர்களுடன் வரும் குழந்தைகள் பொழுதுபோக்குவதற்கு வசதியாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணையின் கரை பகுதியில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மான், சிங்கம் போன்ற மிருகங்களின் உருவங்கள், இருக்கைகள், நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பூங்கா பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பூங்கா புதர்மண்டிய நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு

பூங்கா என்றால் அங்கு பூச்செடிகள் இருக்கும். ஆனால் இங்குள்ள பூங்காக்களை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. அதற்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துகள் அடைக்கலம் புகுந்துள்ளன. இதனால் அங்கு வர சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதேபோல் திறந்தவெளி பார்போல பூங்கா பகுதி திகழ்கிறது. அங்கு அமர்ந்து மதுப்பிரியர்கள் தினமும் மதுபானம் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தாங்கள் மதுபானம் குடித்தபிறகு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் காலி மதுப்பாட்டில்கள் அங்கு குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.

புத்துயிர் பெறுமா?

மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழ்வதால், அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே குடிமகன்களின் அட்டூழியத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் புதர் மண்டிய பூங்காக்களை புத்துயிர் பெற செய்ய வேண்டிய பொறுப்பு பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அய்யன் ராஜ்குமார்:- பழனி பகுதியில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகளை தவிர வேறு ஏதும் சுற்றுலா வசதிகள் இல்லை. எனவேதான் வார விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அணைக்கு வந்து செல்கிறோம். ஆனால் அணை பகுதியில் பூங்கா தொடங்கிய காலத்தில் எல்லா உபகரணங்களும் நன்றாக இருந்தது. பராமரிப்பு இல்லாததால் தற்போது பூங்கா பாழடைந்து கிடக்கிறது.

எனவே குழந்தைகள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் பூங்காக்களில் போதிய பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி


பிரசாந்த் (பொருந்தல்):- பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகளுக்கு வாரவிடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது சீசன் என்பதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகளுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொழுதுபோக்குவதற்கு பூங்காக்கள் இருந்தாலும் அவை புதர்மண்டி கிடப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே அணை பகுதியில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தினால் சுற்றுலா வளர்ச்சி பெறும். இதன்மூலம் சிறு வியாபாரிகளும் பயன் அடைவர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்