8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-28 22:01 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி என்பவர் ஓவிய-கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஓவிய ஆசிரியர் ராமசந்திர சோனி தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கூறினர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராமசந்திர சோனியை அனைத்து மகளிர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், மாணவியிடம் சகஜமாக பழகியதாகவும் கூறினார். எனவே சம்பந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமசந்திர சோனி தன் கையை தொட்டும், இழுத்தும் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கூறினார்.

இதைத் தொடர்ந்து ராமசந்திர சோனி மீது போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராமசந்திர சோனி மீது புகார் கூறியதாக கூறப்படுகிறது. எனவே இந்த புகார்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்