போலீஸ் விசாரணைக்கு பயந்து பெயிண்டர் தற்கொலை
சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த பெயிண்டர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த பெயிண்டர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டர்
சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன் மணிகண்டன் (வயது 27). இவர் பெயிண்டராக வேலைப் பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அவருடைய அண்ணன் ரமேஷ் மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி வரை மணிகண்டன் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
தூக்கில் பிணம்
அப்போது மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். இது குறித்து மணிகண்டனின் அண்ணன் ரமேஷ் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பயந்து தற்கொலை
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு மணிகண்டன் காதல் தொல்லை கொடுப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்துமாறும் மாணவியின் தாய் கடந்த வாரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணைக்கு வருமாறு மணிகண்டனை செல்போனில் அழைத்தோம். வெளியூரில் இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்றார்கள்.
இது குறித்து உறவினர்கள் கூறும்போது, 'மணிகண்டன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார்' என தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.