இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-26 15:12 GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், விரளி மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை போன்றவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்த விதவிதமான கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், ஏட்டுகள் இருதயராஜ்குமார், ராமர் மற்றும் போலீசார் தூத்துக்குடி கடற்கரையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு நாட்டுப்படகில் 2 பேர் சந்தேகப்படும்படியாக ஒரு பார்சலை ஏற்றிக் கொண்டு புறப்பட முயன்றனர். உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

வலி நிவாரணி மாத்திரை

இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் அந்த படகில் சோதனை செய்தனர். அப்போது, 450 அட்டைகளில் இருந்த 4 ஆயிரத்து 500 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகள் நரம்பியல் தொடர்பான வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுவது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தல் இல்லாமல் இருந்த மாத்திரைகளை பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத்திரைகளில் விலை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. உரிய மருந்து சீட்டுகளும் இல்லை. இதனால் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் தயாரிப்பதற்காக, இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி செல்லப்பட இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உரிய விசாரணைக்கு பிறகு கியூ பிரிவு போலீசார் பிடிபட்ட நாட்டுப்படகு, மாத்திரைகளை சுங்கத்துறையில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்