முதுமலையில் தாயை பிரிந்த குட்டி யானைகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் பாகன்கள்

முதுமலையில் குட்டி யானைகள் குறும்புத்தனங்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Update: 2024-06-19 11:15 GMT

முதுமலை,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே நூற்றாண்டுகளை கடந்த பழமை வாய்ந்த முகாமாக விளங்குகிறது. இங்கு தற்போது 3 குட்டிகள் உள்பட 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை பிடித்து முதுமலை முகாமில் வைத்து கும்கி யானைகளாக மாற்றப்படுகிறது.

வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை மீட்டு முகாமில் பாகன்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. பின்னர் நாளடைவில் சாதுவான யானைகளாக மாற்றப்பட்டு, கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பகுதியில் மீட்கப்பட்ட 6 மாத குட்டி யானை மற்றும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மீட்கப்பட்ட 3 மாத குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றுக்கு 4 பாகன்கள், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் திரவ உணவுகள் வழங்கப்படுகிறது.

வழக்கமாக கும்கி யானைகளுக்கு தினமும் காலையில் உடற்பயிற்சி மற்றும் மனதை ஒருமுகப்படுத்த கூடிய யோகாசனம், கும்கி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதேபோல் 2 குட்டி யானைகளையும் கும்கியாக மாற்றுவதற்கு தொடக்கமாக தினமும் காலையில் பாகன்கள் நடைபயிற்சி அளித்து வருகின்றனர். இதனால் இரட்டை குழந்தைகள் போல் குட்டி யானைகள் குறும்புத்தனங்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.

தாயை பிரிந்த நினைவுகள் இல்லாத வகையில் வனத்துறையின் பாகன்கள் கண்ணும் கருத்துமாக குட்டி யானைகளை பராமரிக்கின்றனர். வீடுகளில் குழந்தைகள் எண்ணெய் தேய்ப்பதற்கும், குளிப்பதற்கும் அடம்பிடிப்பது போல் குட்டி யானைகளும் நடைபயிற்சியின் போது சோர்ந்து நிற்பதும், சில சமயம் அடங்க மாட்டேன் என்பதை போல் அடம்பிடிப்பதும், பாகன்களுக்கு கீழ்ப்படிந்தும், குழந்தைகள் போல் விளையாடியும், சுட்டித்தனம் செய்தும் காண்போர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்