நெல் விதை ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது - செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்
உயர் விளைச்சல் நெல் விதை ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதிய அளவில் இருப்பில் உள்ளது என்று வேளாண்மை அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.;
உயர் விளைச்சல் நெல் விதை ரகங்கள்
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவம் தொடங்கியுள்ள நிலையில் சம்பா பருவத்திற்கு தேவையான சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் விதை ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பில் உள்ளது. நமது மாவட்டத்தில் சாகுபடியில் உள்ள முக்கிய ரகங்களான ஏடிடி 37, ஏடிடி 53, பிபிடி 5204, கோ 51, கோ 52, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, எம்.டி.யு 1010, என்.எல்.ஆர் 34449, ஆர்.என்.ஆர் 15048, விஜிடி1 போன்ற நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.
கேழ்வரகில் எம்.எல் 365 மற்றும் கோ 15, உளுந்தில் வம்பன் 8 மற்றும் வம்பன் 11, மணிலாவில் தரணி, ஜி.ஜே.ஜி 31, ஜி.ஜே.ஜி 32, கே 9, கே.எல் 1812, டி.எம்.வி 14 மற்றும் வி.ஆர்.ஐ 8, எள் பயிரில் டி.எம்.வி 7 ஆகிய ரகங்களும் இருப்பில் உள்ளன.
50 சதவீத மானியத்தில்
மேற்படி விதைகளை விதை கிராம திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான தரமான சான்று பெற்ற விதைகளை தேர்ந்தெடுத்து 50 மில்லி லிட்டர் ரைசோபியம் மற்றும் 50 மில்லி லிட்டர் பாஸ்போபாக்டீரியா திரவ உயிர் உரத்துடன் கலந்து, உலர்ந்த பின் விதைக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவதோடு விளைச்சலும் 25 சதவீதம் அதிகரிக்க கூடும். திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் முதலியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விதை மற்றும் உயிர் உரங்களை பெற்று சாகுபடி செய்திடவும், சாகுபடி பரப்பினை அதிகரிக்க செய்யுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.