20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்

நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.;

Update: 2022-08-26 17:08 GMT


நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-அன்பழகன் (பொதுச் செயலாளர், டெல்டா பாசனதாரர் சங்கம்) : யூரியா தட்டுப்பாட்டை போக்கி தேவையான அளவு யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை எந்திரங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.சீனிவாசன்(இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர்) : சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.குத்தாலம் கல்யாணம் (முன்னாள் எம்.எல்.ஏ.) : கோவில் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும்போது விண்ணப்பித்தபோது பெறப்பட்ட தடை இல்லா சான்றிதழை வைத்தே இணைப்பு வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு எடுக்கும் அளக்குடி பகுதிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையில் வரும் கொள்ளிடத்தின் வடக்கு புற கரையை 500 மீட்டர் அகலப்படுத்த வேண்டும்.

நெல் கொள்முதல்

கலெக்டர்: கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தவும் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடத்தின் வடபுற கரையை சுமார் 500 மீட்டர் அகலப்படுத்தவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மாவை கணேசன்: மழைக்காலங்களில் அடிக்கடி உடைப்பு எடுக்கும் நண்டலாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்.கோபிகணேசன் (தலைவர், காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம்) : மாவட்டத்தில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனே திறக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 20சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

மண் குவாாி

ராமலிங்கம்: விளைநிலங்களில் மண் குவாரி அமைக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதை கைவிட வேண்டும்.கலெக்டர்: விவசாயிகள் தெரிவித்த அனைத்து குறைகளையும் கவனத்தில் எடுத்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் இணை இயக்குனர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்