கறம்பக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்
கறம்பக்குடி பகுதியில் சம்பா அறுவடை பணி தொடங்கி உள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அறுவடை பணிகள் தொடக்கம்
கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில், 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மீதம் உள்ள 27 ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு கல்லணை கால்வாயில் தடையின்றி தண்ணீர் கிடைத்ததால் காவிரி பாசன பகுதிகளில் சம்பா சாகுபடி தொய்வின்றி நடைபெற்றுள்ளது.
இதேபோல் மற்ற பகுதிகளிலும் ஆழ்குழாய் பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் நடவு பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது நெற் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நெல்குவியல்களை வைத்து காத்திருப்பு
இந்தநிலையில் கறம்பக்குடி ஒன்றியத்தில் குறுவை மற்றும் சம்பா அறுவடை காலத்தில் 27 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கறம்பக்குடி தாலுகாவில் மணமடை, ரெகுநாதபுரம் உள்பட 4 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
மற்ற பகுதிகளில் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பலர் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்களில் நெல்மணிகளை குவியலாக்கி வைத்து காத்திருக்கின்றனர். எனவே கறம்பக்குடி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-
கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்
தீத்தான்விடுதியை சேர்ந்த பொன்னுசாமி:- கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி உரிய காலத்தில் தொடங்கி நடைபெற்றதால் தற்போது பல பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் மூட்டைகளை பாதுகாக்க வழி இன்றி பலரும் வேதனைபட்டு வருகின்றனர். கொள்முதல் நிலையங்களை தாமதமாக திறந்தால் ஒரே நேரத்தில் பலரும் நெல்மணிகளை கொண்டுவந்து நாட்கணக்கில் காத்து கிடக்கும் நிலை உருவாகிறது. இணையதள பதிவு தொடங்கி பல சிக்கல்களை சந்திக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளபடுகிறார்கள். எனவே கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்.
மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகள்
பள்ளத்தான்மனையை சேர்ந்த மோகன்:- வறட்சி, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாண்டி ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி பயிர்களை விற்று முதல் ஆக்குவதற்குள் பெரும்பாடுபட வேண்டி உள்ளது.
இயற்கையின் உதவியால் இந்த ஆண்டு சம்பா பயிர்கள் கறம்பக்குடி பகுதி விவசாயிகளுக்கு கை கொடுத்து உள்ளது. பல பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் சேமிப்பிற்கான இடவசதி இன்றி விவசாயிகள் வெட்ட வெளியில் குவித்து வைத்து உள்ளனர்.
மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாவதற்குள் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். பின்னர் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களை சொல்லி கொள்முதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையை உருவாக்க கூடாது.
மேலும் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் அரசியல் தலையீட்டை தவிர்த்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க ேவண்டும்
கறம்பக்குடி தென்னகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்:- நடவு தொடங்கி அறுவடை முடித்து நெல்லை காசாக்குவதை வரை விவசாயிகள் படும் சிரமம் சொல்லி மாளாது. கடந்த குறுவை பருவத்தின் போது நெல் கொள்முதல் செய்வதில் குறைபாடு, காலதாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் சாலைமறியல், முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டது. எனவே கறம்பக்குடி தாலுகாவில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.