பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு
அண்ணலக்ரஹாரம் சாந்த சற்குண காளியம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி;
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் அரசலாற்றின் தென்கரையில் சாந்த சற்குண காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகோற்சவ விழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பால்குடம், சக்திகரகம், வேல், காவடி புறப்பாடு நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் காலை பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் புறப்பாடு நடந்தது. பல்வேறு இடங்களுக்கு வீதி உலாவாக சென்ற பச்சைக்காளி, பவளக்காளிக்கு வீடுகள் தோறும் அர்ச்சனை செய்தும்,மாவிளக்கு போட்டும் வழிபாடு செய்தனர். நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளுக்கு பச்சைக்காளி, பவளக்காளி வீதி உலா நடந்தது. இன்று(புதன்கிழமை) அம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) கலை நிகழ்ச்சிகளும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கஞ்சிவார்த்தல் மற்றும் விடையாற்றி வைபவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக விழாகுழுவினர் ராஜேந்திரன், ராமச்சந்திரன், ராஜாராமன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.