தென்காசி அருகே பச்சைநாயக்கன் குளத்தை காணவில்லை..!

தென்காசி அருகே பச்சை நாயக்கன் குளத்தை காணவில்லை என பொதுமக்கள் திகைக்கும் புகார் அளித்தனர்.

Update: 2023-01-07 18:45 GMT

விவசாய நிலங்கள் அமைந்துள்ளதாக கூறப்படும் இடம்.

தென்காசி அருகே, குளத்தை காணவில்லை என பொதுமக்கள் திகைக்கும் புகார் அளித்தனர். இந்த மனுவை பெற்ற 4 அரசு துறைகளும் அந்த குளம் பற்றிய தகவல் இல்லை என கைவிரித்ததால் மக்கள் பரிதவிக்கிறார்கள். சினிமா காட்சி போல் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இதுபற்றி பார்க்கலாம்.

பச்சைநாயக்கன் குளம்

தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் பச்சைநாயக்கன் குளம் என்ற ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டன. குளத்திற்கு கீழ்புறம் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. இந்த நிலங்களில் தென்காசி கீழப்பாறையடி தெரு, மேலப்பாறையடி தெரு, மனக்காவலன் தெரு, கொடிமரம், மரைக்காயர் பள்ளிவாசல் பகுதி போன்ற இடங்களைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் விவசாயம் செய்து வந்தனர். சோளம், கடலை, சிறு பயறு, எள் போன்றவற்றை பயிரிட்டு அறுவடை செய்தனர்.

காலப்போக்கில் பொதுமக்கள் தங்கள் நிலங்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த பாதையை ெரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டது. இதனால் இவர்களுக்கு அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை. சுமார் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாமல் அந்த நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.இந்தநிலையில் அந்த இடத்திற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என்றும், பச்சைநாயக்கன் குளத்தின் ஓரமாக ஒரு வழி பாதை தர வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

குளம் இல்லை

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்த மனு நீர்வளத் துறைக்கு சென்றது. அந்த துறையினர், தங்களது ஆவணத்தில் இந்த குளம் இல்லை என்று பதில் அனுப்பி விட்டனர். இதேபோன்று வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், சிற்றாறு வடிநில கோட்ட அலுவலகம் ஆகிய துறைகளிடமிருந்தும் தங்களது ஆவணங்களில் இந்த குளம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து விட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைக்கும் இந்த மக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் `குளத்தை காணவில்லை' என்று புகார் மனு கொடுத்துள்ளனர்.

சினிமா காட்சி போல்...

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணோம் என்று போலீசில் புகார் அளிப்பார். அது போன்று இந்த மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். விவசாயம் செய்வதற்கு, தங்களது இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக இந்த குளம் யாரிடம் இருக்கிறது? என்பதை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குளத்தை கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 4 அரசு துறைகளும் அதுபற்றி ஆவணத்தில் இல்லை என கைவிரித்து விட்டதால் திகைத்துப்போய் உள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் கூறியது:- நான் தென்காசியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு சொந்தமான இடம் ஆய்க்குடி ரோட்டில் உள்ளது. என்னை போன்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்திற்கு செல்வதற்கு பாதை இல்லை. இதுகுறித்து கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் கோரிக்கை மனு கொடுத்தோம். பச்சைநாயக்கன் குளத்தில் ஓரமாக வழிப்பாதை கேட்டோம். கலெக்டரும் அதனை ஆய்வு செய்து தருவதாக கூறினார். இந்த மனு பல்வேறு துறைகளுக்கு சென்று விட்டு திரும்பி விட்டது. எங்களுக்கு இதில் ஒரு வழிப்பாதை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தென்காசி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. நலக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி:- தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் விவசாயிகளுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை இல்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தோம். அந்த மனு நீர்வளத்துறைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தங்களது ஆவணத்தில் இந்த குளம் இல்லை என்று கூறினார்கள். பின்னர் அந்த மனு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றது. அவர்களும் தங்களது ஆவணத்தில் இல்லை என்று கூறி நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். நகராட்சி அலுவலகத்தில் இருந்து அந்த குளம் தங்களிடம் இல்லை என்று கூறி, பொதுப்பணித்துறை சிற்றாறு வடிநீர் நிலக் கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களும் தங்களிடம் அதுபற்றிய தகவல் இல்லை என்று கூறி விட்டார்கள். அரசு துறைகள் நான்கு துறைகளிடமிருந்து சம்பந்தப்பட்ட குளம் தங்களது ஆவணத்தில் இல்லை என்று கூறினால் அந்த குளம் எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது? அதனை கண்டுபிடித்து எங்களுக்கு வழிப்பாதை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்