'தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா முட்டுக்கட்டையாக இருக்கிறது'- பீட்டர் அல்போன்ஸ்
‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா முட்டுக்கட்டையாக இருக்கிறது’ என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.;
கடையநல்லூர்:
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் அருகே சுந்தரேசபுரத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் எந்த ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டாலும் அதற்கு எதிராக பேசும் வழக்கத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வைத்திருக்கிறார். கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம். இந்த ஆயிரம் ரூபாய், ஏழை மாணவிகளுக்கு உதவிக்கரமாக இருக்கும். இப்படி ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களை தான் பா.ஜனதா கொச்சைப்படுத்தி வருகிறது.
தமிழக மக்களின் வாழ்க்கை தரம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என்றால் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்களால்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரையும் செயல்படவிடாமல் செய்வது தான் பா.ஜனதாவின் செயலாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.