அதிக பாரம் ஏற்றிய லாரிகள் கேரளா செல்ல தடை

வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி வழியாக அதிக பாரம் ஏற்றிய லாரிகள் கேரளா செல்ல அந்த மாநில பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

Update: 2023-02-23 18:45 GMT

கிணத்துக்கடவு

வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி வழியாக அதிக பாரம் ஏற்றிய லாரிகள் கேரளா செல்ல அந்த மாநில பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

கல்குவாரிகள்

கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன.இதனால் வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடி அருகில் இருந்து உழல்பதி வரை சாலை பழுதடைந்து வந்தது. இதற்கு எல்லையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அறிவிப்பு பலகை

இதையடுத்து வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி அருகில் கேரள எல்லைக்குள் அந்த மாநில அரசின் பொதுப்பணித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 10 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வரும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மலையாள மொழியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதனால் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே அந்த சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

நிம்மதி

எனினும் அதிக பாரம் ஏற்றி செல்லும் அனைத்து லாரிகளும் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் வாளையார் வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றது.

இதுகுறித்து தமிழக-கேரள எல்லையில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது:- அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளால் சாலை மிகவும் மோசமானது. மேலும் அவை பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. தற்போது கேரள அரசு உத்தரவால் வீரப்பகவுண்டனூர் வழியாக அதிக பாரம் ஏற்றிய லாரிகள் கேரளாவிற்கு செல்லாமல் இருப்பது எங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்