ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருமருகல் அருகே வாழ்மங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-08-11 19:15 GMT

திருமருகல் அருகே வாழ்மங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அகரகொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் வாழ்மங்கலத்தில் உள்ள மாதா கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, தோப்புத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த தொட்டி எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அதில் உள்ள குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ்மங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்