நிலுவையில் உள்ள கடன்களை பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்

வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன்களை வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர் கூறினார்.

Update: 2023-01-23 18:17 GMT

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கிகளின் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் பேசியதாவது:-

பொதுமக்களுக்கு கடன் உதவிகளை அதிகமாக காலதாமதமின்றி வழங்க வேண்டும். கடன் வழங்கும் சில இனங்களில் 100 சதவீதத்திற்கு மேல் இலக்கு எட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. விவசாயிகளுக்கு விவசாய கடன், தாட்கோ கடன், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியக்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உள்ளிட்ட கடனுதவிகளை எளிய முறையில் விரைவாக வழங்க வேண்டும்.

எளிய முறையில்

வங்கிகளை ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் அணுகி பயன்பெறும் வகையில் வங்கிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கிலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் செம்மையான முறையில் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையிலும், ஆக்கபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் 126 நபர்களுக்கு ரூ.2.67 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் சதவீதம் 163 ஆகும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 88 சதவீதம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சியிலும், வட்டாரங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு கடன் முகாம்கள் நடத்தப்பட்டு 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டு விரைவில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள்

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 146 சதவீதமும், புதிய தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 112 சதவீத கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் நிலுவையில் உள்ள கடன்களை வருகின்ற பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்