வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 75 கடைகளுக்கு 7 கடைகளே ஏலம் போயின
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 75 கடைகளுக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 7 கடைகள் மட்டுமே ஏலம் போனது.;
புதிய பஸ் நிலையம்
வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 87 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓய்வறை உள்ளிட்டவைகளுக்கு 12 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 75 கடைகளுக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏலம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கடைகள் இல்லாததால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்தநிலையில் மீண்டும் கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கடைகள் ஏலம் எடுப்பது தொடர்பாக பலர் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் விண்ணப்பங்களை போட்டனர்.
ஆர்வம் காட்டவில்லை
இதையடுத்து நேற்று ஏலம் விடுவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏராளமானவர்கள் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கருதப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விண்ணப்பங்கள் போடும் பெட்டிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவிலான வியாபாரிகளே வந்திருந்தனர்.
இந்தநிலையில் காலை 11.30 மணி அளவில் அந்த பெட்டி உதவி ஆணையர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உதவி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர்கள் குமரவேல், தனசேகரன், சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள், ஏலம் எடுக்க விண்ணப்பித்தவர்கள் முன்னிலையில் திறந்தனர்.
7 கடைகள் மட்டுமே...
இதில் 12 விண்ணப்பங்கள் இருந்தது. அவர்கள் மற்றும் நேரடியாக கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த ஒருவர் என 13 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 7 கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் 75 கடைகளில் இன்று 7 கடைகள் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது. எனவே அந்த கடையும் மறுஏலம் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மீதம் உள்ள அனைத்து கடைகள் அடுத்த கட்டமாக ஏலம் விடப்படும். ஏலம் விடப்பட்டது தொடர்பான பணிகள் வீடியோகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.