ஓட்டப்பிடாரத்தில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு:முன்னாள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்ஆஸ்பத்திரியில் அனுமதி
ஓட்டப்பிடாரத்தில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காற்றாலை அமைக்க எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பெரியகுளம் அருகில் தனியார் காற்றாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே அங்கு காற்றாலை அமைத்தால் குளத்துக்கு நீர்வரத்து பாதிக்கப்படும் என்று கூறி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அங்கு காற்றாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அங்கு சென்ற சுந்தர்ராஜ் உள்ளிட்டவர்கள், காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த காற்றாலை நிறுவன மேற்பார்வையாளரான கடலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஹரி விக்கோவுக்கும், சுந்தரராஜ் உள்ளிட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இரு தரப்பினரும் ஒருவரை தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், ஹரி விக்கோ ஆகிய 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுந்தரராஜ் அளித்த புகாரின்பேரில், ஹரி விக்கோ உள்ளிட்ட 2 பேர் மீதும், ஹரி விக்கோ அளித்த புகாரின்பேரில், சுந்தரராஜ் உள்ளிட்ட 5 பேர் மீதும் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.