எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-07 17:55 GMT

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை, வசந்த கால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து மூன்றடி மண் தானமாகக் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவு அளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது

பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றியும்; புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்