பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஏகாதசியில் விரதமிருந்து இறைவனை வழிபடுவதால் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதில் அனைத்து ஏகாதசியிலும் விரதம் இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் என்று பக்தர்கள் மத்தியில் ஐதீகமாக கருதப்படுகிறது. இதனால்தான் வைகுண்ட ஏகாதசி தனி சிறப்பு பெறுகிறது.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு
அதேபோல் நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக பெருமாள், கோவிலை சுற்றி வலம் வந்து வசந்த மண்டபத்தில் அருள்பாலித்தார். அதன் பிறகு பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷங்களை எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.
இதனிடையே மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் விழுப்புரம் பெருமாள் கோவிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பூவரசங்குப்பம்- சிறுவந்தாடு
இதேபோல் விழுப்புரம் அருகே பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக அதிகாலை 5 மணிக்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பூவரசங்குப்பம் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறுவந்தாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் காலை 5 மணியளவில் பெருமாள், சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோலியனூர்- வளவனூர்
கோலியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியிலும் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காணை அருகே பெரும்பாக்கம் வேங்கட வரதராஜபெருமாள் கோவிலிலும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வளவனூர் அக்ரஹாரத்தில் உள்ள வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமி மாடவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் மாலோலன் செய்திருந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்டஏகாதசியை யொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பி.ஆர்.எஸ்.ஜவுளி உரிமையாளர் ரங்கமன்னார் செட்டியார், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வெங்கடேசன், மாவட்ட தி்.மு.க. தலைவர் டாக்டர் சேகர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர் பட்டாட்ச்சியார் செய்திருந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்.பி.வி.பஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், இந்து சமயஅறநிலையத்துறை செயல் அலுவலர் சூரிய நாராயணன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். .திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செஞ்சி
செஞ்சி அருகே சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக அரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். .விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மேற்பார்வையில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பிரமுகர்கள் செய்திருந்தனர். இதேபோல் செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில், செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீவனூர்
திண்டிவனம் அருகே தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.