திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.;
திருவெறும்பூர்:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், குடும்ப அட்டை போன்றவை தொடர்ந்து வழங்கப்படும். தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும். நமக்கு என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டபடி 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-2 வகுப்புக்கு 20-ந் தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு 27-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். இந்த தேதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாற்றம் இருந்தால், அது குறித்து முதல்-அமைச்சரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் தெரிவிப்போம். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அடுத்த மாதம் நடக்க உள்ள 'நீட்' தேர்வுக்கு தடை வாங்க கூறுபவர்கள்தான், விலக்கு அளிக்க வேண்டியவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.