6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

Update: 2023-06-12 17:16 GMT

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிவடைந்து கடந்த மே மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 672 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வந்தனர்.

வாசலில் நின்று வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்த பின் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து, புத்தக பைகளை தோளில் சுமந்து கொண்டும், டிபன் பாக்ஸ் பை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் எடுத்து கொண்டு உற்சாகமாக வந்தனர். மேலும் வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவ-மாணவிகளை பெற்றோர்களும் வாழ்த்தி வழியனுப்பியதோடு, பலர் தாங்கள் நேரில் அழைத்து வந்து பள்ளிக்கு கொண்டு வந்து விட்டனர். சில மாணவ-மாணவிகள் சைக்கிளிலும், ஆட்டோக்களிலும் வந்திறங்கினர். பள்ளி அருகில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியோடு நடந்து வந்தனர்.

மேலும் கோடை விடுமுறை முடிந்து சுமார் 40 நாட்களுக்கு பின் தங்களது வகுப்பு சக மாணவ-மாணவிகளை பார்த்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைக்கொடுத்தும் அன்பையும், நட்பையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். பல நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் சில மாணவிகள் ஒருவரையொருவர் கைகளை பிடித்தப்படி கூட்டாக நடந்து பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்களும் பள்ளி வாசலில் நின்று மாணவ-மாணவிகளை அன்போடு வாழ்த்தி வரவேற்றனர்.

பாடப்புத்தகங்கள்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை ரோஜா பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

மேலும் இனிப்புகள் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் அதனை வாங்கி படித்தனர். புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கினார்.

இதில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் வழங்கினார்.

பள்ளி திறந்த முதல் நாளான நேற்று அவர்களுக்கு வகுப்பறையில் புதிய வகுப்பிற்கான பாடங்கள் பற்றி அறிமுகத்தை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

காத்திருந்த பெற்றோர்

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்து நேரில் பள்ளியில் விட்டனர். பள்ளிக்குள் சென்றதும் பிரார்த்தனை வகுப்பிற்காக வரிசையில் மாணவிகள் நின்றனர். பள்ளிக்குள் சென்றாலும் மாணவிகளை பார்த்தப்படி அவர்களது பெற்றோர் பள்ளியின் வெளியிலேயே சுற்றுச்சுவர் அருகே காத்திருந்தனர். பிரார்த்தனை வகுப்பு முடிந்து மாணவிகள் வகுப்பிற்கு சென்ற பின் அவர்கள் புறப்பட்டு சென்றனர். சில பெற்றோர் தங்களது மகளை பார்த்து கையசைத்தனர்.

பொன்னமராவதி, கந்தர்வகோட்டை

பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளை வரவேற்று அப்பள்ளி தலைமையாசிரியை நிர்மலா தலைமையிலான ஆசிரியர்கள் மாணவிகளுக்கு லட்டு, சாக்லெட் போன்ற இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.

விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கறம்பக்குடி அருகே உள்ள தட்டாமனைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் விடுமுறை கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாத்தா, பாட்டி வீட்டுக்கு சென்றது, திருவிழா நாடகம் பார்த்தது, நுங்கு வண்டி ஓட்டியது, கிரிக்கெட் போட்டி நடத்தியது, பெற்றோருடன் விவசாய பணியில் ஈடுபட்டது குறித்து மாணவர்கள் சுவராஸ்யமாக தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், கல்வி ஆண்டின் முதல் நாள் என்பதால் பாட வேளையை தவிர்த்து மாணவர்களை உற்சாகமூட்ட இந்நிகழ்ச்சியை நடத்தினோம். மாணவர்கள் தங்கள் தனி திறமையை வளர்த்து கொள்ள விடுமுறையை பயன் உள்ளதாக ஆக்கி கொண்டதை அவர்களின் அனுபவ பகிர்வின் மூலம் உணரமுடிந்தது. ஒவ்வொரு மாணவரும் தெரிவித்த கருத்துக்கள் சக மாணவர்களை உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது. என்று கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்