கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் பால் குளிர்விப்பு நிலையங்கள் திறப்பு

கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் பால் குளிர்விப்பு நிலையங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

Update: 2023-07-29 18:12 GMT

பால் குளிர்விப்பு நிலையங்கள்

கரூர் மாவட்டம், வல்லகுளம், திருமலை ரெட்டிபட்டி, வேப்பங்குடி, மஞ்சா நாயக்கன்பட்டி ஆகிய 4 இடங்களில் ஆவின் நிறுவனத்தின் தலா 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.1 கோடியே 6 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான பால் குளிர்விப்பு நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கரூர் தோரணக்கல்பட்டி ஆவின் குளிரூட்டும் மையத்தில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிர்விப்பு மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளை மையப்படுத்திய அமைப்பாக ஆவின் மாற வேண்டும். முழுக்க முழுக்க பால் உற்பத்தியாளர்கள் நலனே ஆவின் உடைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். எனவே இதனை வழுசேர்த்து தக்க வைக்க வேண்டியது நம்முடைய கடமை.

மாடுகள் வளர்க்க வேண்டும்

நிறைய இடங்களில் பால் கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்யாமல் மாத கணக்கில் நிலுவை தொகை உள்ளது. அதை ஒரே சமயத்தில் அனைத்து பாக்கிகளையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அது நடைமுறையில் உள்ளது. மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டும். பால் உற்பத்தியை பெருக்க, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அவர்கள் அதிக அளவிலான மாடுகள் வளர்க்க வேண்டும். பின்னர் அரசால் தாட்கோ, டாம்செட்கோ மற்றும் மகளிர் திட்டம் இன்னும் பல்வேறு நிறுவனங்கள் அனைத்திலும் மானியத்துடன் கூடிய கடன் வசதி விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும்.

சங்கத்தை அதிகப்படுத்த...

கால்நடைகளுக்கு மருத்துவ வசதிகள் செய்வதற்கு மிகத் தெளிவாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயத்தை சார்ந்து இருக்கக்கூடியதால் அதிகபால் உற்பத்திக்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய பால் உற்பத்தியை உயர்த்துவதற்கு நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். தற்போது 203 கிராமங்களில் 146 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இன்னும் 100 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிகப்படுத்த வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்