பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-02 12:06 GMT

பிரசன்ன வெங்கடேச பெருமாள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான 107-வது திவ்யதேசமாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சிவலிங்கத்தின் மேல் பெருமாள் காட்சியளிக்கிறார். அரியும், சிவனும் ஒன்றாக காட்சி அளிக்ககூடிய புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

27 நட்சத்திரங்களில் திருவோணம் நட்சத்திர ஸ்தலமாகும். பக்தர்கள் இங்கு தரிசனம் செய்தால் சித்திரகுப்தர் எழுதிவைத்த பாவங்களை நிவர்த்தி செய்யும் ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் ஆண்டாள் சன்னதி, தாயார் சன்னதி, கிருஷ்ணர் சன்னதி அமைந்துள்ளது.

சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை நித்ய பூஜைகள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மூலவர் பெருமாள் புஷ்ப அங்கி அலங்காரத்திலும், உற்சவர் பரமபதநாதர் அலங்காரத்திலும் காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவில் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கூட்ட நேரிசலை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு வரிசையில் சென்று பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 350 போலீசார் ஈடுபட்டனர்.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் சிவகுமார், செயல் அலுவலர் ஏகவள்ளி, கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்