குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது, மாநில அரசுக்கு இல்லை - அண்ணாமலை பேட்டி
சி.ஏ.ஏ. சட்டம் என்னவென்று தெரியாமல் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கின்றன என்று தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லில் எழுதப்பட்டது இல்லை. சி.ஏ.ஏ.வால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்தியாவில் பிறப்பதன் மூலம் நமது நாட்டு குடியுரிமை கிடைக்கிறது. இலங்கையில் 13-வது சட்டத்திருத்தத்தை கொண்டு வர பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.சிங்கள தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கி உள்ளோம். இலங்கையில் இருந்து வந்த அனைத்து அகதிகளுக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் கூட அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்தால் கூட அவர்கள் நாட்டின் குடிமக்களாக அறிவிக்கப்படுவர்.
சி.ஏ.ஏ. சட்டம் என்னவென்று தெரியாமல் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கின்றன. மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சி.ஏ.ஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது. குடியுரிமை கொடுப்பதற்கு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்கு மட்டும்தான் உள்ளது.
இந்தியாவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர். சி.ஏ.ஏ. சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்னிடம் யாரும் ஆலோசிக்கவில்லை.நான் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் யாரும் சொல்லவில்லை.
பா.ம.க., தே.மு.தி.க. உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமையிலான குழு இருக்கிறது.அக்குழுவினர் விரைவில் கூட்டணிக் குறித்து தெரிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.