'ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டியதில்லை; நிறைய பேர் தேவை' - தமிழிசை சவுந்தரராஜன்
படிப்பவர்களும், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கிறேன். இன்னும் அதிகமான பேர் அரசியலுக்கு வர வேண்டும். நான் எந்த கல்லூரிக்குச் சென்று பேசினாலும், படிப்பவர்கள் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதேபோல், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம்.
தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எதுவுமில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். இன்னும் நிறைய பேர் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.