கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 23 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்தது - விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு...!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .

Update: 2023-07-28 07:06 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி பின்னர் கடந்த வாரம் சற்று குறைந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து வரும் நாட்களில் வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்தது.

இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். இந்த மாத தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது முதலே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன.

இன்று முதன் முதலாக தக்காளி வரத்து 30 லாரிகளுக்கும் கீழ் குறைந்துவிட்டது. தக்காளி வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்